நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் நீட் தேர்வு இன்று நடந்து முடிந்தது.
இன்று நடந்த நீட் தேர்வில், நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 14 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 520 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட 11 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் அமைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
கடந்த வருடத்தை விட இந்த வருட தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கூறினர். உயிரியல் பாடப்பிரிவில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் வேதியியலில் வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.