அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாவட்ட வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
அரியலூரில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் ஐந்து நீதிமன்றங்களும் இயங்கி வருகிறது. இதற்கு வாடகையாக மாதத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கு மேல் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், வழக்காடிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனனர்.
இதற்கிடையில் அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும், இதற்காக 3.58 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தின் முன்பு வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.