வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் 2-வது முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து, கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகர பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் ஒரு வார்டில் 1200 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 வாக்காளர்களும் இருந்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1200 முதல் 2400 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1400 முதல் 2800 வாக்காளர்களும் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.