புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் வார்டு மறுவரையறை: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வார்டு மறுவரையறை இறுதி செய்யப்பட்டு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வார்டு மறுவரையறை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து வரைவு அறிக்கை இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வரைவு அறிக்கை வெளியான பிறகு, அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, வார்டு மறுவரையறை இறுதி செய்யப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே போல், மற்ற மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வார்டு மறுவரையறை இறுதி செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version