மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

கோவை மாட்டத்தில் காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியினர் போல் செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும், அதிமுக கெறடாவுமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்களிடம், தேர்தல் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தேவையில்லாத ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

வேட்புமனு பரிசீலனையில் அதிமுகவினரின் மனுக்களை ஏதாவது காரணம் கூறி நிராகரிக்கவும் சதி நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அப்போது, வரும் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடக்காமல் நேர்மையுடனும், பாதுகாப்புடனும் தேர்தலை நடத்த வலியுறுத்தினார். அவருடன் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏ-க்களும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, காவல்துறையினர், அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், வேட்பு மனு பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர்களை மனுக்களை மட்டும் நிராகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு சென்றிருப்பதாக புகார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக வேட்பாளர் மேயராகி, பழையபடி கோவையை வளர்ச்சி மாவட்டமாக்குவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

Exit mobile version