உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமானதில் 33 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை தீயில் நாசமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கொக்காங்காடு பகுதியில் கேசவன் என்பவரின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ பற்றியது. இதனால் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் தீ பரவியது. மளமளவென பற்றிய தீயில் மொத்தம் 6 வீடுகளும் எரிந்து சாம்பலானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து மற்ற வீடுகளுக்கும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 33 சவரன் நகையும் 2 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.