மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் 4வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு குறைவாக இருந்ததால் முதல்வர் கமல்நாத், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சிவராஜ் சிங் சவுகான் 4வது முறையாக மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.