அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் திருத்த மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சென்னை ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா காரணமாக, அதிகம் பேர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை அமலில் இருக்கும் நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தன்சாவடி பகுதியில் போராட்டம் நடத்திய வைகோ, தமிழச்சி தங்க பாண்டியன்,இளங்கோவன் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்திலும், ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய கே.பாலகிருஷ்ணன் மீது வடக்கு கடற்கரை காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன், கலி.பூங்குன்றன், சிற்றரசு, சிவ.ராஜசேகரன் உள்பட 150 பேர் மீது, அரசு உத்தரவை மீறுதல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் கடலூரில் திருமாவளவன், திருச்சியில் கே.என்.நேரு, கரூரில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version