சிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார்: சிறப்புத் தொகுப்பு

தமிழக சட்டப்பேரவையில் ராமசாமிப் படையாட்சியாரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. யார் இந்த ராமசாமிப் படையாட்சியார்? அவருக்கு அரசு அளித்த மரியாதைகள் என்னென்ன? இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…

1918, செப்டம்பர் 16ல் பிறந்தவர் சிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார். மக்கள் இவரை எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் என அழைத்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை 1951ல் தோற்றுவித்தார். 1952ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இவரது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டப்பேரவையில் 19 இடங்களிலும், நாடாளுமன்ற மக்களவையில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது, ராமசாமிப் படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினரானார்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 பேரவை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆதரவால் காங்கிரசின் ராஜாஜி தமிழக முதல்வரானார். பின்னர் 1954 ஆம் ஆண்டில் கர்மவீரர் காமராசரின் அழைப்பை ஏற்று காமராசர் தமிழக முதல்வராகவும் இவர் ஆதரவளித்தார், அதனால் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பும் அளிக்கப்பட்டார்.

பின்னர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும் ராமசாமிப் படையாட்சியார் தேர்வானார்.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற இவர், கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மறைந்தார். அந்நிலையில் 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது அது, ‘விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னரே அது ‘விழுப்புரம் மாவட்டம்’ என்று மாறியது.

தமிழக அரசியலில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான ராமசாமிப் படையாட்சியாரின் நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்தநாளை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விழாவாக அறிவித்து அன்னாரின் புகழைப் போற்றினார். அத்தோடு கடலூரில் ராமசாமிப் படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சத்தில் மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கு அடிக்கல்லும் முதல்வரால் நாட்டப்பட்டது.

இந்த மரியாதைகளின் தொடர்ச்சியாகவே இப்போது தமிழக சட்டப்பேரவையின் மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் அமைச்சர் ராமசாமிப் படையாட்சியாரின் திருவுருவப் படமும் திறக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version