சனிக்கிழமை மட்டும் திருடும் சென்டிமென்ட் திருடர்கள்

சென்டிமென்ட் காரணமாக சனிக்கிழமை மட்டுமே திருட்டில் ஈடுபட்டு வந்த 3 திருடர்களை திருப்புல்லாணி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

80-களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமான கதாநாயகிகளுக்கு ”ரா” வரிசையில் பெயர் வைக்கப்பட்டிருந்தது சென்டிமென்ட்டாக பார்க்கப்பட்டது. இதேபோல், கிளைமேக்ஸில் கதை மாந்தர் சாவது உள்ளிட்ட பல சென்டிமென்ட்கள் கோலிவுட்டில் தற்போதும் பின்பற்றப்படுகின்றன. இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, திருட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பது தான் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில், சனிக்கிழமை மட்டுமே திருடும் நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப், கேமரா ஆகிய மின்சாதனப் பொருட்கள் தொடர்ந்து திருடுபோய் வந்தன.

இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தனிப்படை அமைத்து விசாரித்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சனிக்கிழமை மட்டும் திருடும் 3 சென்டிமென்ட் திருடர்களை அடையாளம் கண்டனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த வெங்கடேஷன், மகேந்திரன், லோகநாதன் ஆகிய 3 திருடர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

திருடர்கள், சில காரணங்களுக்காக இந்த விநோத சென்டிமென்டை கையாண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

திரைப்படம் முதல் இளைஞர் அணிச்செயலாளர் பதவி விழா வரை பின்பற்றப்படும் செண்டிமெண்ட் யுத்திகள், இப்போது திருடர்களையும் பதம்பார்த்திருக்கிறது என்பதே காலத்தின் கோலம்!

Exit mobile version