சென்னை மாம்பலம் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். மாம்பலம் சட்டம் ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் மதன்குமார் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக, இணை ஆணையர் மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மதன்குமார் தலைக்கவசம் அணியாதது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
பணியின் போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தன்மீது மோத வந்ததாகவும், ஆட்டோவை பின்தொடர்ந்து ஓட்டுநரை மடக்கி பேசுவதற்காக தலைக்கவசத்தை கழற்றியதாகவும், அவர் சந்தேக நபராக இருந்தால் காவல் நிலையம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து கண்காணிப்பில் இருந்ததால், கடமையை செய்யும் பொருட்டு தலைக்கவசம் மீண்டும் அணிய கவனிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் குமார் என்பவரை துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள், அவரை அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியது தொடர்பான புகைப்படம் ஆகியவற்றை மாம்பலம் ஆய்வாளரிடம், உதவி ஆய்வாளர் மதன்குமார் சமர்ப்பித்துள்ளார்.