தங்கம் விலை விண்ணைத் தொடும் இந்த நேரத்தில், மனிதர்களைப் போலவே ஒரு பூஞ்சையும் தங்கத்தை சேகரிக்கிறது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. தங்கத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்கக் கூடியது என்று கருதப்படும் இந்தப் பூஞ்சையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் இந்தத் தொகுப்பில்…
பூஞ்சைகள் என்பவை காளான் வகையைச் சேர்ந்த கண்ணுக்குப் புலனாகாத உயிரினங்கள். இவற்றில் பச்சையமும் இல்லை இவை இடம்பெயர்வதும் இல்லை, என்பதால் இவை தாவரங்கள் விலங்குகள் என்ற இரண்டுக்கும் இடைப்பட்டவையாகப் பார்க்கப்படுகின்றன. அழுகும் பொருட்கள், சிதையும் உலோகங்கள் இவற்றைச் சார்ந்தே பெரும்பாலான பூஞ்சைகள் வாழ்கின்றன.
உயிர்ப்புள்ள உலோகங்களைச் சார்ந்து வாழும் பூஞ்சைகளில் ஒரு வகைதான் ‘புசாரியம் ஆக்ஸ்ஃபோரம்’. இது சிதையும் பண்புடைய இரும்பு, செம்பு போன்ற உலோகங்களை உணவுக்காக சார்ந்து வாழ்வது முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இதே வகையைச் சேர்ந்த பூஞ்சை ஒன்று தங்கத்தை தனது சுற்றுப்புறங்களில் இருந்து சேகரிப்பதை ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான அமைப்பான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ.வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.
தங்கம் என்பது எந்த சிதைவுக்கும் உட்படாதது, உணவாகப் பயன்படாதது என்பதால் இந்தப் பூஞ்சை ஏன் தங்கத்தை சேகரிக்கின்றது என்பது புதிராகவே உள்ளது.
மனிதர்கள் தங்கத்தை சேர்த்து தங்களை அலங்கரித்துக் கொள்வதைப் போல, இந்தப் பூஞ்சையும் தான் சேகரிக்கும் தங்கத்தைக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. பூஞ்சையின் இந்த தங்க ஆசைக்குக் காரணத்தை ஆராயும் அதே நேரம், இந்தப் பூஞ்சையைக் கொண்டு மின்சாரக் கழிவுகள், சாக்கடைகள் போன்றவற்றில் வீணாக வெளியேறும் தங்கத்தை பிரித்தெடுக்கலாமா? என்றும் ஆய்வுகள் தொடங்கி உள்ளன.
தங்கத்தின் விலைக்கு அதன் அரிய தன்மை மிகப் பெரிய காரணம். தங்கச் சுரங்கத்தில் 1 டன் மண்ணை சலித்தால் 6 கிராம் தங்கம்தான் சராசரியாகக் கிடைக்கிறது. இதனால் இந்தப் பூஞ்சையை வைத்து, தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியுமா? என்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலிய நாடு இப்போது தங்க உற்பத்தியில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ளது. இந்தப் பூஞ்சையின் கண்டுபிடிப்பு ஆஸ்திரேலியாவை முதல் இடத்துக்கு உயர்த்தக் கூடியதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை இந்தப் பூஞ்சை கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்தாலோ, தங்கம் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டுபிடித்தாலோ, இது தங்கத்தின் விலையை வீழ்ச்சியடைய வைக்கும் என்பதில் ஐயமில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.