உச்சத்தில் தங்கம் விலை – என்ன காரணம்?

உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை தேக்கம் அடைந்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என பலவற்றில் முதலீடுகளை குறைத்து, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனையானது. 1 கிராம் 76 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 693 ரூபாய்க்கு விற்பனையானது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 76 ரூபாய் அதிகரித்து 4ஆயிரத்து 334 ரூபாய்க்கும், சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்து 34ஆயிரத்து 672 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 90 காசுக்கும் 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 900க்கும் விற்பனையானது.

Exit mobile version