இன்று 144-வது பிறந்தநாள்: படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல், சிதறி கிடந்த பல ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியாவை உருவாக்கிய பெருமை கொண்டவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 144-வது பிறந்த நாளையொட்டி, நர்மதை ஆற்றங்கரையோரம் உள்ள கேவடியா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் அருகேயுள்ள படேலின் 597 அடி உயர பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இதேபோல், டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கிழே வைக்கப்பட்டிருந்த படேலின் உருவபடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, தேச ஒற்றுமையை போற்றும் விதமாக தேசிய ஒற்றுமை ஓட்டத்தை அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Exit mobile version