சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி முருகேசன், வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடை நடத்தி வந்தார்.
முருகேசன் தனது நண்பர்களான சிவன்பாபு, சங்கர் ஆகியோருடன் மது அருந்திவிட்டு, பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூவரையும் வழிமறித்த போலீஸார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் செய்த வியாபாரி முருகேசனை, போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதில், சுய நினைவை இழந்த வியாபாரி முருகேசனை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து பெரும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. காவலர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
எனினும் கலங்கி நிற்கும் அவரது 2 பெண்குழந்தைகள் அடங்கிய குடும்பத்துக்கு காவல்துறையால் முறையான ஆறுதலைக்கூட வழங்க முடியாது என்பதே உண்மை.
இந்நிலையில், அடுத்த பேரிடியாக வெளிவந்துள்ளது முருகேசனின் உடற்கூறு அறிக்கை.
காவலர்கள் அடித்ததில் பின்மண்டையில் காயம்பட்டு, மண்டை ஓடு உடைந்து, அதிர்வால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கும் அந்த அறிக்கையால் காவலர்கள் தாக்கியதன் கொடூரம் விளங்குகிறது என்று சமூகப் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.