தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூர் அருகே கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த சுபலெட்சுமி என்பவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 19 ஆம் தேதி, குழந்தைகள் இருவருக்கும் வழக்கமான தடுப்பூசி செலுத்த வேண்டும் என, காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம், சுபலெட்சுமி கேட்டுள்ளார். அதற்கு, முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான், குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்துவேன் என செவிலியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. சுபலெட்சுமி, தனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் என மறுத்த பிறகும், வலுக்கட்டாயமாக அவருக்கு செவிலியர் சித்ரா கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இந்நிலையில், சுபலெட்சுமி வீட்டிலேயே உயிரிழந்தார்.
வலுக்கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான், சுபலெட்சுமி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.