விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டிப் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 11 லட்ச ரூபாய் பணமும், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களைக் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்டத் தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் 344 மின்னணு எந்திரங்கள், 344 கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.