சூப்பர் ஓவரில் பெங்களூருவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐ.பி.எல்.2020 தொடரின் 10வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதனையடுத்து, பெங்களூரு அணித்தரப்பில் தேவ்தத் படிக்கல், ஃபின்ச் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். 35 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவ்தத்தும் அவுட்டானார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி. டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களுடனும், 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களுடன் சிவம்துபேவும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட்களையும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி. முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, டி காக், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, இஷான் கிஷன், பொல்லார்ட் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு சிகஸர்களை கிஷன் விளாசினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உள்பட 99 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் அவுட்டானார். கடைசி பந்தில் பொல்லார்ட் பவுண்டரி விளாச போட்டி சமனில் முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட பொல்லார்ட் 60 ரன்களுடனும், க்ருனால் பாண்ட்யா ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி தரப்பில் உதனா 2 விக்கெட்களையும், வாசிங்டன் சுந்தர், சாஹல், ஸம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போட்டி சமனில் முடிந்ததையடுத்து, வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. இதனையடுத்து பொல்லார்ட், பாண்ட்யா ஆகியோர் களமிறங்கி 6 ரன்கள் எடுத்தனர். 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் களமிறங்கி பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக, 24 பந்துகளில் அரைசதம் விளாசிய டி வில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 4 புள்ளிகள் பெற்று டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள், புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

ஐ.பி.எல்.2020 தொடரின் 11வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version