ஐ.பி.எல். 2020 : ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 2020 தொடரின் மூன்றாவது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் முதல் முறையான இன்று களம் கண்டுள்ள படிக்கல் பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் விளாசியிருந்த படிக்கல், ஷங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இணையை 90 ரன்கள் வரை ஹைதராபாத் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. விராட் கோலி, ஃபின்ச் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். 20வது ஓவரில் தனது 34வது ஐ.பி.எல் அரை சதத்தை பூர்த்தி செய்த டி வில்லியர்ஸ், 30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி. ஜோஷ் பிலிப்பி மட்டும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.

ஹைதராபாத் தரப்பில் அபிஷேக், விஜய் சங்கர், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஹைதராபாத் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட்டானார். பேர்ஸ்டோ மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து மனிஷ் பாண்டே அவுட்டானார். தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ அரை சதம் விளாசினார். ஹைதராபாத் அணி வெற்றி பெற வாய்ப்புகள் இருந்த நிலையில், விக்கெட்டுகள் சீட்டுகட்டுகள் போல ஒற்றை இலக்க ரன்களில் சரிந்தது. மறுமுனையில் ஒற்றை ஆளாகப் போராடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்து அவுட்டாக அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணியால் 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தினார். டூபே, நவ்தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டெய்ன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

ஐ.பி.எல். 2020 தொடரின் நான்காவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே, நாளை(22-09-2020) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version