சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் ஐ.பி.எல். 2020 தொடரின் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடிவருகிறது.
டாஸில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் முதல் முறையான இன்று களம் கண்டுள்ள படிக்கல் பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் விளாசியிருந்த படிக்கல், ஷங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இணையை 90 ரன்கள் வரை ஹைதராபாத் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. விராட் கோலி, ஃபின்ச் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். 20வது ஓவரில் தனது 34வது ஐ.பி.எல் அரை சதத்தை பூர்த்தி செய்த டி வில்லியர்ஸ், 30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி. ஜோஷ் பிலிப்பி மட்டும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
ஹைதராபாத் தரப்பில் அபிஷேக், விஜய் சங்கர், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.