தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தலைமை காவலர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமை காவலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

தூத்துக்குடி மாவட்டம், பாத்திமா நகரைச் சேர்ந்தவர் 41 வயதான லூர்து ஜெயசீலன். இவர் அதே பகுதியில் டீ கடை நடத்திவந்தார்.

கடந்த 9-ம் தேதி கத்திக்குத்து காயங்களுடன் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்காட் காவல் நிலைய போலீசார், லூர்து ஜெயசீலன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.

அப்போது கொலையான ஜெயசீலன் மீது ஒரு கொலை வழக்கு, உட்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான பின்னணி என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலரான மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த பொன்மாரியப்பன் மற்றும் தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் இருவரும், ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், காவலர் பொன்மாரியப்பனின் மாமா, ரவுடி அழகு என்பவரை கொலை செய்ததற்காக பழிக்கு பழியாக மோகன்ராஜுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Exit mobile version