ரவுடி தொழிலில் கொடி கட்டி பறக்க ஹாலிவுட் படங்களில் வருவது போல துப்பாக்கி சுடும் பயிற்சி…. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க குண்டு துளைக்காத கார் என கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி விசாரணையின் போது அவர் சொன்ன தகவல்களால் அதிர்ந்து போய் இருக்கிறது காவல்துறை. சிடி விற்பணையில் தொடங்கி ஹைடெக் ரவுடியாக மாறிய மணி விசாரணையில் அளித்த திடுக் தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக்கட்டுரை.
கொலை, கொள்ளை என பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிடி மணியை, கடந்த 2-ம் தேதி போரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். சிடி மணியிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக சிடி மணியிடம் Audi, Benz, BMW என விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஏராளம். ஆனாலும் மிரட்டல், கட்ட பஞ்சாயத்து போன்ற பல விஷயங்களுக்கு மணி பயன்படுத்துவது அவரது பார்சூனர் காரை தானாம். கடந்த ஆண்டு மே மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே சிடி மணி மீது நாட்டு வெடி குண்டு வீசி எதிரிகள் தாக்குதல் நடத்திய போது அவர் சென்று கொண்டு இருந்த பார்ச்சூனர் கார் தான் அவரை காப்பாற்றியது.
இதனால் சென்டிமென்டாக இந்த காரை வைத்திருக்கும் சிடி மணி அதனை குண்டு துளைக்காத காராக மாற்றி வடிவமைக்க டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.
சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகள் மட்டும் சுட்டால் வெறும் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் ஏன் எனக் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தி அச்சுறுத்த வைத்திருப்பதாக, வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மதுரையில் தனது நண்பரின் தென்னந்தோப்பு ஒன்றில் துப்பாக்கி சுட பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிடி மணியின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர். அதை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல சிடி மணியின் கூட்டாளிகள் மதுரையில் பதுங்கியிருப்பதால் அவர்களை பிடிக்கும் பணியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.