திருநெல்வேலியில், கொலை வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கேரவனில் ராக்கெட் ராஜா வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா நாயகர்கள் போல ராக்கெட் ராஜாவும் கெத்து காட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொலை வழக்கு விசாரணைக்காக, இப்படி திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்துக்குள் கேரவனில் வந்து கெத்து காட்டியிருக்கிறார் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்தவர். வெங்கடேஷ் பண்ணையார் மறைவிற்குப் பின்னர், அவரது இடத்தைப் பிடித்தார் ராக்கெட் ராஜா. பல்வேறு கொலை வழக்குகள், அடிதடி வழக்குகளில் சிறை சென்று வந்த ராக்கெட் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பாக, போலீசார் தன்னை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னை ஒரு சமுதாயத்தின் ஹீரோவாக காட்டிக் கொண்டவர், பனங்காட்டுப்படை என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். இதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், “நடமாடும் நகைக்கடை” என்ற பெயருக்கு சொந்தக்காரருமான ஹரி என்பவரும், ராக்கெட் ராஜாவுடன் இணைந்து, இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டனர். இதில் தோல்வி அடைந்த சில மாதங்களில் ராக்கெட் ராஜாவும், ஹரியும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
ஓராண்டாக சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார் ராக்கெட் ராஜா. இந்த நிலையில்தான், கடந்த 2016ல் நெல்லை பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கு ஒன்றில், விசாரணைக்காக ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஆதரவாளர்கள் பலரும் நீதிமன்றத்தில் திரண்ட நிலையில், சினிமா நடிகர்கள் பயன்படுத்தும் பென்ஸ் கேரவனில், ராக்கெட் ராஜா தனது பாதுகாவலர்களோடு நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு அரை மணி நேரம் நீதிமன்ற நிகழ்வுக்காக பல ஆயிரக்கணக்கில் கேரவனை வாடகைக்கு எடுத்து வந்து ராக்கெட் ராஜா கெத்து காட்டியது புதிதல்ல. ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டபோது, வாடகை ஹெலிகாப்டரில் ஹரியும், ராக்கெட் ராஜாவும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்து கெத்து காட்டியுள்ளனர்.
தற்போது நீதிமன்றத்துக்கு கேரவனில் வந்து கெத்து காட்டிய ராக்கெட் ராஜா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தான்போட்டியிடுவதாகக் கூறிச் சென்றுள்ளார். இப்படியெல்லாம் கெத்து காட்டினால்தான், பனங்காட்டுப்படை கட்சி இருப்பது தெரியுமோ என்னவோ?
Discussion about this post