உணவில் மயக்க மாத்திரை கலந்து ரெயில்வே பொறியாளரிடம் தங்கசங்கிலியை பறித்த கொள்ளையன்

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில், உணவில் மயக்க மாத்திரை கலந்து, ரெயில்வே பொறியாளரிடம் இருந்து தங்கசங்கிலியை பறித்த கொள்ளையனை, காவல்துறையினர் சாதுர்யமாக கைது செய்தனர். 

சென்னை தெற்கு ரயில்வேயில் பொறியாளராக இருப்பவர் அமீத்குமார். இவர், கடந்த மாதம் 18ம் தேதி கொல்கத்தாவில் தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்துள்ளார்.ரயில் ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே வந்தபோது, வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட தயாரானார். அப்போது, ரெயில் நிலையத்தில் இறங்கி நொறுக்குத் தீனி வாங்கிக் கொண்டு மீண்டும் இரயிலில் ஏறியுள்ளார். சாப்பிட்ட சற்று நேரத்தில் இரயிலின்
இருக்கையில் மயங்கிக் கிடந்த அமீத்குமாரை, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இரு தினங்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அமீத்குமாரிடம் விசாரித்த போது, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளை போனது தெரியவந்தது. ரெயில் பயணத்தின் போது, தான் சாப்பிட்ட பின்னர் மயங்கியதாகவும், அப்போது தனது அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மஞ்சள் டி-சர்ட் அணிந்திருந்த வட மாநில நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மஞ்சள் டி சர்ட் அணிந்து சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். ரெயில்வே டிக்கெட் கவுண்டரில் இருந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்ததால், அங்கு விசாரித்த போது, அவர் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சென்றதையும் கண்டறிந்தனர்.

பின்னர், செல்போன் நம்பர் மூலம், அதன் சிக்னலை வைத்து கொள்ளையனை கண்காணித்த காவல்துறையினர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து அவனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்தனர்.விசாரணையில் அவன் பிரபல மயக்க மாத்திரை கொள்ளையன் சுபுகான்கர் சங்பூர்த்தி என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று டிபன் பாக்சை வைத்து விட்டு நொறுக்குத் தீனி வாங்க ஏலூரு ரெயில் நிலையத்தில் அமீத்குமார் இறங்கியதும், டிபன் பாக்சில் இருந்த உணவில் லோரா சிப்பம் என்ற மயக்க மாத்திரையை பொடியாக்கி தூவியுள்ளான் கொள்ளையன் சுபுகான்கர்.

அவரும் உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்தில் மயங்கி விட, அருகில் அமர்ந்திருந்த கொள்ளையன் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழற்றிக் கொண்டு இடம் மாறி அமர்ந்துள்ளான்.அதே நேரத்தில் மயக்கம் உண்டாக்கும் இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கினால் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version