திருச்சி மணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் லாக்கர்களை உடைத்து பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வங்கியை திறந்த அதிகாரிகள் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கியின் பின்புறம் உள்ள பள்ளி வழியாக வந்த கொள்ளையர்கள் வங்கியின் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் 5 லாக்கர்களை காஸ் சிலிண்டர் வெல்டிங் மூலம் உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த உபகரணங்களை சம்பவ இடத்திலேயே போட்டுச்சென்றுள்ளனர்.
இதனிடையே இந்த வங்கியில் உள்ள ஏடிஎம் மில் கடந்த 2013 ம் ஆண்டு 25 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் இரண்டு முறை வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இருந்த போதும் இதுவரை வங்கியில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச்சென்றுள்ளனர்.
இந்த கொள்ளையில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வங்கி இருக்கும் பகுதியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.