மருத்துவர் வீட்டில் கொள்ளை

சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், 200 சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்து, கொள்ளையர்களை விரட்டி பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சென்னை அடையாரில் கடந்த 15ம் தேதி மருத்துவர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில், வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை போனது.  இது குறித்து அடையார் காவல் நிலையத்தில் மருத்துவர் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அடையார் காவல்துறையினர்   அடையார் குற்றப்பிரிவு ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
 
உதவி ஆய்வாளர் விஜய்பாபு, தலைமை காவலர் ராஜசேகரன், தியாகராஜன், ரமேஷ், சுப்ரமணி, மற்றும் காவலர்கள் பன்னீர், சதீஷ் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை காவல்துறையின் கொள்ளை போன வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆராயத்துவங்கினர். அடையாரில் ஆரம்பித்த தேடுதல் மத்தியகைலாஷ், கிண்டி, தி.நகர், நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு வரை கொள்ளையர்கள் செல்லும் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதன்பிறகு மீண்டும் கொள்ளையர்கள் வடபழனிக்கு வருகிற காட்டிச்சிகளும் கைப்பற்றப்பட்டு அப்பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
பின்னர் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக தெரிந்து கொண்ட காவலர்கள் அங்கே பதுங்கியிருந்த பார்த்திபன் என்பவனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணன், நிர்மல், வடபழனியை சேர்ந்த பிரபாகரன், ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், கஞ்சா போதைக்கு அடிமையாகி சுற்றி தெரிந்ததும் தெரியவந்தது.
 
இவர்கள் மீது சூளைமேடு, திருவேற்காடு, கோடம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்டு 30 கிலோ மீட்டர் தூரம் பொருத்தப்பட்டிருந்த  200 சிசிடிவி காட்சிகளை  ஆராய்ந்து கொள்ளையர்களை பிடித்த தனிப்படை காவல்துரையினருக்கு வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Exit mobile version