ஐபிஎல் போட்டி: சென்னைக்கு எதிராக பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிய ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 25 ரன்களும், அக் ஷ்தீப் நாத் 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பார்த்தீவ் பட்டேல் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 53 ரன்களில் கேட்ச் ஆனார்.

பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 5 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்டெயின் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்ததாக டு பிளிஸ்சிஸ் 5 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் வெளியேறினர்.

சென்னை வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டோனி 35 பந்துகளில் தனது அரை சத்தினை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய அவர் பல சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தாகூர் ரன் அவுட் ஆக சென்னை அணி 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. அதிரடி காட்டிய டோனி 84 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டெயின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாஹல், சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Exit mobile version