ரஜினி எப்போதுமே தேர்தலில் நிற்க மாட்டார்- ஏன் தெரியுமா?

மக்கள் முன்முடிவு சரியாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் தன் அறிக்கை மூலமாக நிரூபித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்கிளுக்கு வாக்களியுங்கள் என்று என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் ரஜினி. கடந்த டிசம்பர் மாதம் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தவர் தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன் தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’’ என்றும் தெரிவித்தார்.

கால் நூற்றாண்டாக அந்த அறிவிப்பிற்காக காத்திருந்த ரஜினி ரசிகர்கள் அப்போதே அவர் முதல்வராக ஆகிவிட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரஜினியின் அரசியல் காய் நகர்த்தல்களை தொடர்ந்து கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள், ரஜினி தன்னுடைய பட விளம்பரத்திற்காக செய்யும் யுக்தி இது என்று கூறினார்கள். அதே போல் ரஜினியும் அரசியலுக்கு வருவேன் என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு, கட்சி,கொடி என்று எது குறித்தும் வாய் திறக்காமல், கொள்கை என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, எனக்கு தலையே சுத்திருச்சு ? என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அரசியலுக்கு வருவோருக்கு அரிச்சுவடி தெரியாமல் இருக்கலாம், ஆனால் அன்றாட நிகழ்வுகள் தெரியாமல் இருக்குமா ?. 7 பேர் விடுதலை குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு எந்த 7 பேர் என்று கேட்டு மக்களை அதிர வைத்தார். பின்பு மக்கள் கொந்தளித்ததும் மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.நடப்பு அரசியல் குறித்தோ மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ ரஜினிக்கு எந்த வகையிலும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டியது.இந்த உலகிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன பதிலுக்கு விளக்கம் கொடுக்க மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திப்பு நடத்திய ஒருவர் நடிகர் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.

தன் அரசியல் பிரவேசம் குறித்து சொன்ன போது, ஆன்மீக அரசியல் என்றார், சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார், போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்றார். இன்னும் 3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. சிஸ்டம் சரியில்லை என்று சொன்னவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு சிஸ்டத்தை மாற்றி இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை? ஏன் பின்வாங்குகிறார் ? ஏனென்றால் இவர் ரஜினி. கடந்த காலங்களில் இவர் பேசியதை பார்த்தால் நமக்கு புரியும்.

1992 ஆம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத் திரைத் துறையின் சார்பில் ஒரு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும் போது, “நேற்று நான் பஸ் கண்டக்டர், இன்று ஒரு சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ.. அதே நேரத்தில் ஆண்டவா எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன் என்றால் அரசியலுக்கு வந்தால் என் நிம்மதி போய்டும்” என்று சொன்னார். அன்று அப்படி சொன்னவர் தான் இன்று அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சொன்னார். ஆனால்,தேர்தல் என்று வரும் போது தற்போது பின்வாங்குகிறார்.

இப்படி தனக்கே ஒரு தெளிவில்லாமல் இருக்கும் நடிகர் ரஜினி எப்படி பொதுப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்? எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பார்? ஒருபுறம் அரசியல் குறித்த அறிவிப்பு செய்து தன்னுடைய ரசிகர்களை தக்க வைக்க வேண்டும், மற்றொரு புறம் படங்களாக நடித்து வசூல் குவிக்க வேண்டும் . இதுதான் ரஜினியின் ஃபார்முலா. எனவே ரஜினியின் தற்போதைய பேச்சு தன் நடிப்பில் வரும் வசூலை தக்கவைப்பதற்கான முயற்சியே தவிர அதனால் அவருடைய ரசிகர்களுக்கோ, மக்களுக்கோ ,நாட்டிற்கோ எந்த பயனும் இல்லை.

Exit mobile version