வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட உள்ள நிலையில், அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ள நிலையில், இன்று தனது வேட்புமனுவை ராகுல் தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கென கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா செல்லும் அவர் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். முன்னதாக தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் வாகனத்தில் பேரணியாக சென்று, பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், ராகுல் செல்லும் இடமெங்கிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்கள் ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் உறுதியையடுத்தே வாகன பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version