வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை ராகுல் காந்தி முடிவெடுப்பார் – மூத்த தலைவர்கள் கருத்து

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர் யார் என்பதை, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை எதிர்க்கொண்டது. இந்நிலையில், முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு ராகுல்காந்தியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக உள்ளனர். ஆனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதலமைச்சராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சச்சின் பைலட், அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில், ராகுல் காந்திதான் முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர்களையும் ராகுல் காந்தியே தேர்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்றார்.

Exit mobile version