ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற ஐபில் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பிரிஸ்டோவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு லோகேஷ் ராகுலுடன் இணைந்த மயங் அகர்வால் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக விளையாடிய அகர்வால் 55 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் ஹைதராபாத்தின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்தார். ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளை பெற்ற பஞ்சாப் அணி 3-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியடைந்த ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

Exit mobile version