புதுச்சேரி சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

4 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. முதலமைச்சரும், நிதியமைச்சருமான நாராயணசாமி, 4 மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாவேதநாயகம் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, முதலமைச்சர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும், துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் போராட்டம் நடத்தியது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் முழக்கம் எழுப்பினர். 65 நிமிடங்கள் மட்டுமே நடந்த சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

Exit mobile version