காங்கிரஸ் கட்சியில் அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம்: பிரியங்கா சதுர்வேதி

காங்கிரஸ் கட்சியில் அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மதுராவில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியிடம் வரம்புமீறி நடந்து கொண்டதாக அக்கட்சியை சேர்ந்த சிலருக்கு இடைக்கால தடைவிதித்து அக்கட்சி உத்தரவிட்டிருந்தது. அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களைவிட அடியாட்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காங்சிரசிற்காக கட்சியிலேயே விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தான் சந்தித்துவரும் நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது செய்தி தொடர்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளை தான் துறப்பதாக ராகுல்காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version