ராணுவ வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கை ராணுவத்தினர் வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்குமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது குறித்தும், முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டமைப்பினர் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிறிசேனா, இதற்கான தீர்வுகளை உடனடியாக பெறும் வகையில், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

தனியாருக்கு சொந்தமான நிலங்களில், ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செயற்பாடுகள், மேலும் தொடர்வதை அனுமதிக்க முடியாது எனவும், அந்த நிலங்களை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில், எதிர்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version