மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்

இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இலங்கை மண்ணில் பூர்வ குடிகளான தமிழர்கள், தாய்நிலத்தில் உரிமை கோரி பன்நெடுங்காலமாக நடத்தி வந்த போராட்டத்தின் இறுதியாக நடைபெற்றது தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை…. முதலில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடிய தந்தை செல்வா, உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த திலீபனில் தொடங்கி, ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலை புலிகள் வரை, பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தங்களது உரிமைகளை காக்க களம் கண்ட தமிழ் சமூகம், தனி ஈழம் ஒன்றையே ஒற்றை குறிக்கோளாக கொண்டிருந்தது.

இலங்கையில் மாவீரன் பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற உள்நாட்டு போரையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றிய விடுதலை புலிகள், தனி அரசாங்கமே நடத்தி வந்தனர். 1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம், தமிழீழ தாயகத்தை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது. தமிழீழம் மட்டுமே அனைத்து உரிமை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என கர்ஜித்த பிரபாகரன், இலங்கை அரசுக்கு 30 ஆண்டுக்காலம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். தரைப்புலிகள் படை, பெண்புலிகள் படை, கடற்புலிகள் படை, ஈரூடகப் படையணி, வான்புலிகள் படை, கரும்புலிகள் படை, சிறப்புப் படையணி, வேவுப்புலிகள் படை என பல்வேறு படைகளை அமைத்து, வல்லரசு நாடுகளை போல் ஈழத்தை வழிநடத்தி வந்தார் மாவீரன் பிரபாகரன். ஆண்டுகள் பல கடந்தாலும், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையிலான பகையும் நீடித்து வந்தன.

2005 ஆம் ஆண்டு இலங்கை தேர்தலை வட, கிழக்கு தமிழர்கள் புறக்கணிக்குமாறு விடுதலை புலிகள் அழைப்பு விடுத்தனர். இதனால், விக்ரமசிங்கே தோல்வியடைந்து, சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில், சிங்கள ஆதிக்க தலைமையாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார். அதிபர் பொறுப்பு ஏற்றதில் இருந்து, விடுதலைப் புலிகளை ஒடுக்கவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்ட ராஜபக்ச, பல்வேறு வியூகங்களையும், துரோகிகளையும் துணையாக கொண்டு கோலோச்ச தொடங்கினார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிங்கள ராணுவம் கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் முன்னெடுக்கப்பட்டது.

அப்போதுதான் முன் எப்போதும் சந்திக்காத இழப்பை சந்தித்தனர் தமிழர்கள். இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் நாட்கள் நீடித்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை ராணுவம் முற்றுகையிட்டது. இந்த போரின் இறுதிக்கட்டத்தில், முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்த தமிழர்கள் மீது, ஈவு இரக்கம் இன்றி ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம்… இதில் குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் விதிமுறைகளை மீறி இலங்கை ராணுவம் நடத்திய பச்சை படுகொலையை கேள்வி கேட்கக் கூட, அன்றைய எந்த அரசும் முன்வரவில்லை. பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, தொப்புள் கொடி உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட வலியை, உலக தமிழர்கள் மறந்திராத நிலையில், இனப்படுகொலை தொடர்பான நீதி விசாரணைக்கு கூட அழுத்தம் தர இயலாமல், ஆண்டுதோறும் இந்நாளை கடந்து செல்வது தான் வேதனையின் உச்சம்….

 

Exit mobile version