தேமுதிகவில் இதுவரை எந்த பதவியும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்த், தற்போது தேமுதிக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவில் இதுவரை எந்த பதவியும் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவனும், கொள்கைப் பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவை வாரிசு அரசியல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது தமது மனைவியையே பொருளாளராக நியமித்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே, தேமுதிக பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ள பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.