விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த், கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர், விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல் நலம் குறித்து, பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்தை அழைத்துச் சென்றதாகவும், பரிசோதனையில் அவருக்கு ரத்தத்தில் லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பிரேமலதா கூறினார். எனினும், விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்தார். மேலும், தங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Exit mobile version