கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் அதிமுக அரசு, கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனமாக செயல்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின்போது, முதலமைச்சரின் பதிலுரையில், அதிமுக ஆட்சி தொடர்பாக பேசிய கருத்துக்கு, பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட பேரிடர் காலத்தில் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் உழைத்ததாக கூறிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு நடவடிக்கை எடுத்ததாக பதிலளித்தார். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். பேசும்போது மாஸ்க் அணியத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது தவறான கருத்து என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் உரையில் திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் இடம்பெறவில்லை எனக்கூறவில்லை என்ற எதிர்க்கட்சித்தலைவர், எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார். 2011ம் ஆண்டு திமுக அரசு விட்டுச்சென்ற பல பணிகளை, அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். 

 ஆளுநர் உரையில் நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், மக்களின் முக்கிய திட்டமாக உள்ள காவிரி – கோதாவரி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 

 இதனிடையே கிருஷ்ணா நதிநீரை தாங்கள்தான் கொண்டுவந்தோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் கூறினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கிருஷ்ணா நதிநர் தமிழ்நாட்டிற்கு வர வித்திட்டது மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என பதிவு செய்தார்.

Exit mobile version