முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் திமுக அமைச்சர் ஆய்வு செய்த போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மருத்துவப்பூங்கா, அதிமுக ஆட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை பூங்காவை திறந்து வைத்தார். தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த கால்நடை பூங்காவினை, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த 10 கட்டடங்களில், அவருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் பேப்பர் கொண்டு மூடி மறைக்கப்பட்டது. இதற்கு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கல்வெட்டுகளை மூடி மறைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல கோடி ரூபாய் மதிப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மருத்துவப் பூங்காவை கொண்டுவந்த அதிமுக அரசின் சாதனைகளை, பேப்பர்களை கொண்டு மூடி மறைத்து விட முடியாது என்றும் பொதுமக்கள் விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கெங்கவல்லி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் நல்லதம்பியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version