ஆப்கானிஸ்தானில் 2-வது முறையாக பொதுத் தேர்தல் முடிவுகள் தள்ளிவைப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் மீண்டும் இரண்டாவது தடவையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் அருகே உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இங்கு கடந்த 18 ஆண்டுகளாக அரசுக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகின்றது. இதனால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. தாலிபன் தீவிரவாதிகளின் மீதான அச்சத்தால், ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றத்திற்குள்ளானவை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தாலிபன்களின் அச்சுறுத்தலையும் மீறி சுமார் 90 லட்சம் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தலின் போது நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளினால் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நாளில் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், நவம்பர் 14ஆம் தேதிக்கு தேர்தல் முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக ஆப்கானிஸ்தானின் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

வாக்குப்பதிவு மையங்களின் பதற்ற நிலையும், வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளும் இந்த தொடர் தேதி மாற்றங்களுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் உயிரைப் பணயம் வைத்து தேர்தலில் வாக்களித்த ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாகி உள்ளனர். அடுத்தடுத்து இரண்டு முறை தேர்தல் முடிவுகளின் தேதி மாற்றப்பட்டு உள்ளதால், ஆப்கன் மக்களோடு, ஜனநாயக ஆர்வலர்களும் தற்போது ஆப்கானிஸ்தானின் தேர்தல் முடிவை எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

Exit mobile version