அர்த்தமற்றுப் போன அமைதி ஒப்பந்தம்: தலிபான்கள் மீது அமெரிக்க வான்படைகள் தாக்குதல்

ஆப்கன் அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2ஆம் தேதி தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க வான்படைகளும் ஒப்பந்தத்தை மீறி தலிபான்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளன.

2002 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளவும், போர் நிறுத்தத்தை ஆப்கன் அரசு மற்றும் தாலிபான்கள் மேற்கொள்ளவும் வகைசெய்யும் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த நெடுங்காலமாக முயற்சிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கனில் இருந்து தங்கள் நாட்டின் 3 ஆயிரம் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பினார். எனவே, அமெரிக்காவின் ஏற்பாட்டில் ஆப்கன் அரசு மற்றும் தாலிபான் பிரதிநிதிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 18 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த நீண்ட பேச்சுவார்த்தையின் முடிவில், ஆப்கனில் இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வது என்றும், 14 மாதங்களுக்குள் அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெறுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால் ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்கன் அரசு கைதிகளாக வைத்துள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா ஏற்றதால் திடீர் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கைதிகளின் விடுதலை குறித்து எதுவும் இல்லை என்றும், இதனால் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். மேலும் இதுபற்றி விவாதிக்க அடுத்தகட்டக் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தாலிபான் தரப்போ ‘அமைதி ஒப்பந்தத்தை மீறுவோம். வெளிநாட்டுப் படைகளைத் தாக்க மாட்டோம், ஆனால் ஆப்கன் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ என்று கடந்த 2ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து தாலிபான் அமைப்பு ஆப்கனின் கிழக்கு மாகாணமான கோஸ்ட் மாகாணத்தில், கால்பந்து மைதானம் ஒன்றில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது. அப்போது கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் இறந்தனர், 11 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஆப்கன் ராணுவத்தின் மீது தாலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அறிவித்து உள்ளார். இதனால் ஆப்கன் அமைதி ஒப்பந்தம் அதன் மை காய்வதற்குள் அர்த்தமற்றுப் போயுள்ளது. மீண்டும் ஆப்கனில் அமைதி நிலைநாட்டப்படுமா? வரும் 10 ஆம் தேதி தோஹாவில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் பங்கேற்குமா? – என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Exit mobile version