தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அஞ்சல் துறைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்பட்டது. இதற்கு ஆரம்பம் முதலே அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள், இந்தி மொழியில் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நண்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நிகழ்ந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதிமுக எம்.பிக்களின் தொடர் வலியுறுத்தலால், அனைத்து பிராந்திய மொழிகளிகளிலும் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் தமிழ் மொழி ஆழமான மொழி என்பதை உணர்ந்து இருப்பதாகவும், இந்நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.