நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளை கண்டித்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு காவல்துறையில் எந்த வழக்கும் இல்லை என தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளில் கடந்த 4 நாட்களாக இணையதளம் முடங்கியுள்ளதால், காவல்துறையிடம் இருந்து வேட்பாளர்கள் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 10 சதவீதம் பேர் மட்டுமே தடையில்லா சான்று வாங்கியுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், 90 சதவீதமான வேட்பாளர்கள் தடையில்லா சான்று கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி, கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.