மயக்க மருந்து தடவிய முககவசம் கொடுத்து நகைகளை திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காசிமேடு சிங்கார வேலர் தெருவை சேர்ந்தவர் திவ்யா(23).சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டத்தில் தனியார் பார்மசியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் பணி செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்றிரவு பணியை முடித்துவிட்டு கந்தகோட்டம் பேருந்து நிலையத்திற்கு வந்து ஷேர் ஆட்டோவில் திவ்யா ஏறியுள்ளார்.அப்போது திவ்யா முககவசம் அணியாமல் இருந்ததால்,ஆட்டோவில் கைக்குழந்தையுடன் வந்த பெண் பயணி ஒருவர் மாஸ்க் ஒன்றை வழங்கி முகத்தில் அணிந்து கொள்ளுமாறு திவ்யாவிடம் கூறியுள்ளார்.
இந்த மாஸ்கை திவ்யா அணிந்தவுடன் மயக்க நிலைக்கு சென்று தன்னை அறியாமல் மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலை வரை ஆட்டோவிலேயே சென்றுள்ளார்.
பின்னர் சற்று மயக்கம் தெளிந்தவுடன் திவ்யா ஆட்டோவில் இருந்து இறங்கி காரணீஸ்வரர் பகோடா தெருவில் தனது ஆண் நண்பரை வரவழைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்மணி யார்? மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருட முயன்றனரா என்பது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.