ஆட்டோவில் தொலைத்த 27 சவரன் நகை: 5மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்த இராஜபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் ஆட்டோவில் தொலைத்த 27 சவரன் தங்க நகைகளையும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் புகார் அளிக்கப்பட்ட 5 மணி நேரத்திலே துரிதமாக செயல்பட்டு நகைகளை மீட்டுக்கொடுத்த காவல்துறையினருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த தம்பதிகள் குறித்த செய்தி தொகுப்பு .

ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டிய மைதிலி மற்றும் அவரது கணவர் ரமேஷ் கண்ணா ஆகிய இருவரும் குடும்பத்துடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 1-ம் தேதி வந்துள்ளனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களையும், கடற்கரையையும் சுற்றி பார்பதற்காக காலை 11:30 மணியளவில் ஆட்டோ மூலம் கலங்கரை விளக்கம் வந்துள்ளனர்.

ஆட்டோவின் பின்புறம் 21 சவரன் நகை, 25 ஆயிரம் ரொக்க பணம், செல்போன் மற்றும் அடையாள ஆவணங்கள் வைக்கப்பட்டிருப்பதை மறந்துவிட்டு இறங்கியுள்ளனர். ஆட்டோவில் இருந்து இறங்கிய பின் நகையை தொலைத்தது ஞாபகம் வந்த பின்னர் பதட்டமடைந்த அவர்கள், ஆட்டோவில் நகையையும், பணத்தையும் தொலைத்து விட்டதாக மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவுடனே குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தீவிரமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்பொழுது சிசிடிவியில் ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுபிடித்தார். பின்னர் தேடியபோது ஆட்டோ பாரி முனை அருகே சென்று கொண்டிருப்பதை கண்டறிந்தார். மேலும், மைதிலியின் செல்போன் ஆட்டோவில் இருந்ததால் செல்போனின் எண்ணை ஆய்வு செய்ததில் ஆட்டோ புளியந்தோப்பில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் புளியந்தோப்புக்கு விரைந்து சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்த நகை மற்றும் பணம் கொண்ட பேக்கை எடுத்தனர். பேக் அவர்கள் விட்டு சென்ற இடத்தில் ஆட்டோவின் பின்புறம் அப்படியே இருந்தது. அப்போது தான் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கருக்கு ஆட்டோவில் பேக் இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது.

புகார் அளிக்கப்பட்ட 5 மணி நேரத்திலேயே சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் என்னுடைய டவர் லொகேஷனை வைத்து நகை மற்றும் பொருட்களை கண்டுபிடித்து கொடுத்த காவல்துறைக்கு ராஜபாளையம் தம்பதிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்ட மெரினா காவல்துறை குற்றப் பிரிவு அதிகாரிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெகுவாக பாராட்டினார்.

Exit mobile version