“அண்ணே ஓட்டிப் பாத்துட்டு தந்துடுறேணே” என்று கூறி கார் திருட்டு! போலீஸ் கிடுக்குப்பிடி!

கன்னியாகுமரி அருகே சொகுசு காரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் ஏமாந்தது எப்படி? கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து காண்போம்.

நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில், சொகுசு காரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த இளைஞர்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியில், விருதுநகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்து
வருகிறார். இவர் தனது சொகுசு காரை விற்பனை செய்வதற்காக செல்போனில் ஆன்லைன் மூலமாக விளம்பரம் செய்துள்ளார்.

பின்னர் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்வதாக கூறிய நபர் ஒருவர், காரை வாங்கிக் கொள்வதாக கூறி அஞ்சுகிராமம் நான்கு வழி சாலை அருகே காரை கொண்டு வருமாறு பிரசாந்திடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரசாந்த், தனது காரை அந்நபர் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது மற்றொரு காருடன் காத்திருந்த அந்நபர், சொகுசு காரை ஓட்டிப் பார்த்த பின்னர், விலை உள்ளிட்ட விவரங்களை பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி சாவியை கொடுக்கவே, சொகுசு காரை ஓட்டி சென்ற அந்நபர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்நபர் விட்டுச் சென்ற மற்றொரு காரை சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் மதிப்பு குறைந்த காரை விட்டுவிட்டு, சொகுசு காரை திட்டமிட்டு திருடிச் சென்றது உறுதியானது. விசாரணையில் சொகுசு காரை திருடி சென்றது குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கடத்தப்பட்ட சொகுசு காரை மீட்டதுடன், அவர் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற மதிப்பு குறைந்த காரையும் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து காரைத் திருடிச் சென்ற இளைஞரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version