ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் காவல் துறையினர்

ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கல்வி சேவையில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் வரும் தமிழக காவல்துறை பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

குற்றவாளிகள் மற்றும் ஏழ்மை நிலைகளில் உள்ளவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றங்கள். சென்னையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மன்றங்கள் சிறப்பான முறையில் இயங்கி வந்தாலும் அவற்றில் அரும்பாக்கம் காவல் நிலையத்தின் கட்டுபாட்டில் இயங்கி வரும் மன்றம் சிறப்பான கட்டமைப்போடும், அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

300க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இங்கு, படிப்புடன் ஒழுக்கமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. காலை மாலை என இரு வேளைகள் இங்கு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் சட்டம், ஒழுங்கு குறித்த பாடம் மட்டுமின்றி, இங்கு படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு, கலை என எதில் ஆர்வமோ, அதில் ஈடுபடுத்தபடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ முகாம், ரத்த தானம் செய்யவும் ஊக்கப்படுத்தபடுகின்றனர்.

வல்லவர்களை உருவாக்குவதைவிட நல்லவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

HCL நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ள கணினி அறையில் சிறுவர்களுக்கான அடிப்படை பாடங்கள் புரஜக்டர் திரை மூலமாகவும், ஆங்கில தட்டச்சு, எம்.எஸ்.ஆபிஸ் போன்றவை வகுப்புகள் மூலம் கற்று தரப்படுகிறது. தேவையும் தகுதியும் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்குவதோடு மட்டுமில்லாமல், இங்கு பயின்ற சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காவல்துறையினரே கல்லூரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவனின் தந்தை கூறும் பொழுது தனது மகனின் பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், படிப்பிலும் நல்ல முன்னேற்றம் உள்ளதாக கூறுகிறார்.

ஏழ்மை, குடும்பச்சூழல் மற்றும் தவறான நட்பு ஆகியவற்றால் தடம் மாறிச்செல்லும் இளம் வயதினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டுவரும் காவல் துறையினர் பாராட்டுதலுக்கு உரியவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

Exit mobile version