விதிமீறல் வண்டி எண்களை வைத்து, வீட்டிற்கே சென்று பெறப்படும் அபராதம்

கோவை அருகே விதிமீறலில் ஈடுபடும் வண்டி எண்களை சிசிடிவி மூலம் படமாக எடுத்து, வாகன உரிமையாளரின் வீட்டிற்கே சென்று அபராதம் பெறும் போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் மிகத்துல்லியமான கேமிராக்கள் 5 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வழியாக இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல், விதிமீறலில் ஈடுபட்டால், அவரது வண்டி எண்கள் படங்களாக எடுக்கப்படுகிறது. பின், வண்டிக்குரிய எண்களை வைத்து வட்டார போக்குவரத்து மையங்களில் முகவரிகள் கண்டெடுக்கப்படுகின்றன. பின், கண்டெடுக்கப்பட்ட முகவரியை வைத்து, விதிமீறலில் ஈடுபடும் நபரின் வீட்டிற்குச் சென்று, போக்குவரத்து காவலர்கள் அபாரதம் விதிக்கின்றனர். இதனால், அவிநாசி சாலையில் செல்பவர்கள் பெரும்பாலானோர் தலைக்கவசத்தை அணிந்து செல்கின்றனர். இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதுபோன்ற துல்லியமான சிசிடிவி கேமாரக்களை 40 இடங்களில் பொருத்தி, விபத்துக்களைக் குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

Exit mobile version