சென்னை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர் நசீம் குறித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் பல பகுதிகளில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் சுமார் 1 கோடி வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரான நசீம் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், ஹரியானாவில் இரு கொள்ளை கும்பல்களில், ஒரு கும்பலை நசீம் கான் வழிநடத்தியது தெரியவந்தது.
ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நசீம் கானை, இன்று இரவு சென்னை கொண்டு வருகின்றனர்.
நசீம் கான் சென்னையில் இருந்து மொத்தமாக 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள கொள்ளைக் கும்பலை விரைவில் கைது செய்து சென்னை கொண்டு வரும் நடவடிக்கையில், தனிப்படை காவல்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே அமீர் அர்ஷ் என்பவனை கைதுசெய்து சிறையில் அடைத்த நிலையில், அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்காவது நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது உறவினரான பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த சாகுல் என்பவர் கற்றுக்கொடுத்த பாடத்தின் அடிப்படையிலேயே கொள்ளைச் சம்பவங்களை அமீர் அரங்கேற்றியதாகவும், தெரிய வந்துள்ளது.
மேலும், வீரேந்தர் ராவத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ள தரமணி போலீசார், அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏழு நாள் கேட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.