வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்கள் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறின. அதனைத் தொடர்ந்து, இந்த மசோதகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அவைகள் அரசிதழில் வெளியிடப்பட்டன. வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய விவசாயிகள் போராட்டங்கள், தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.
இதையொட்டி, டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் நடத்தியப் போராட்டத்தின் போது, டிராக்டருக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பொது சொத்தை சேதப்படுத்தியதாக இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை 6 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.